Popular Posts

Saturday, November 6, 2010

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி






முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி


[ Tues, Aug 24, 2010, 04:55 pm ]



 




பரப்பளவு - 4,433 சதுர கி.மீட்டர்
சென்னையிலிருந்து 700 கி.மீட்டர் தூரம்
மாவட்டத்தலைநகரம்- நாகர்கோயில்




இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டம். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிப்பது இதன் சிறப்பு. தமிழ்நாடு, கேரளா இரு மாநில எல்லையில் இருப்பதால் மொழி, உணவு, உடை என எல்லாவற்றிலும் இரு மாநில பாதிப்புகளையும் காண முடியும். குமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் குறித்து காண்போம்.

குமரி அம்மன் ஆலயம்

கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.

கன்னியாகுமரிக்கு சென்னையில் இருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் செல்லலாம். பேருந்து, ரயில் நிலையங்கள் கோயில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. தங்குவதற்கும் ஏராளமான விடுதிகள் உள்ளன.

காலை சூரிய உதயத்தையும், மாலையில் சூரியன் மறைவதையும் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதைத் தெளிவாக காண்பதற்கு சுற்றுலாத்துறை சார்பில் காட்சிப் கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் மண்டபம்

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். சிகாகோ உரையை முடித்துக்கொண்டு விவேகானந்தர் இங்குதான் தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது.

திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி கடலில் மையப்பகுதியில் கம்பீரமாய் நிறுவப்பட்டிருக்கிறது இந்த திருவள்ளுவர் சிலை. திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

காந்தி நினைவு மண்டபம்

மகாத்மா காந்தியடிகளின் நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பு.

அரசு பழத்தோட்டம்

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அரசு பழத்தோட்டம். விதவிதமான பழங்கள், வெளிநாட்டுச் செடிகள், பழமையான மரங்கள் என பலவற்றை இங்கு காணலாம். காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலும் இந்தத் தோட்டத்தை பார்வையிடலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வட்டக்கோட்டை

குமரியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் 5 கி..மீட்டர் தூரத்தில் வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது வட்டக்கோட்டை.

இருபத்து ஒன்பது அடி உயரத்தில் மூன்றரை ஏக்கர் பரப்பில் உள்ள இக்கோட்டையின் மேற்பகுதியில் துப்பாக்கி மற்றும் பீரங்கியால் சுடுவதற்கு இடைவெளிகள் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் இப்பகுதியில் துறைமுகம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.மேலும் முத்து குளிக்கும் பணிகளும் நடைபெற்று வந்துள்ளது. இத்தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக கடற்கரையை அடுத்த லீ புரம் என்னும் பகுதியில் கலங்கரை விளக்கம் இருந்த தடயம் இன்னும் உள்ளது.

பே வாட்ச் தீம் பார்க்

கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் பாதையில் இரண்டு கீலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பே வாட்ச். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பு. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. காலல 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.










































No comments:

Post a Comment